ராகு கேது உருவான வரலாறு தெரியுமா?

                   அசுரர்கள் மற்றும் தேவர்களுக்கிடையில் நடந்த தொடர்ச்சியான போரால் இருதரப்பினரும் சக்தி இழந்துவிட்டனர்.பின் நாரத  முனிவரின் ஆலோசனை படி இருதரப்பினரும் பாற்கடலை கடைவது என்று முடிவு செய்யப்பட்டது.திருமாலின் படுக்கையான ஆதிசேஷனின் சகோதரி வாசுகி பாம்பு சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து அவரின் கழுத்தை அலங்கரிக்கும் அதிகாரம் பெற்றது.அப்பாம்பை கயிராகவும்,மந்தாரமலை மத்தாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தனர்.
                     பாம்பின் வால் பகுதியை தேவர்களும், தலைப்பகுதியை அசுரர்களும் பிடித்து கடைந்தனர்.அவர்களின் முயற்சியால், அமிர்தம் கிடைத்தால் இருவருக்கும் சமமான பங்கு என்று முடிவு செய்யப்பட்டது.வெகுநேரம் கடைந்தப்பின் மந்தார மலை நழுவத் தொடங்கியது.அதைக்கண்ட திருமால் தனது 2வது அவதாரமான கூர்ம அவதாரத்தை எடுத்து மலையை தாங்கி பிடித்தார்.
                       நெடுநேரத்திற்கு பின் முதல் முதலாக வெளிவந்தது ஆலகால விஷம்.அதைக்கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கினர்.மூவுலகமும் அழியும் அபாயம் ஏற்பட்டது.அதை தடுக்கும் பொருட்டு பரமன் விஷத்தை அருந்த தொடங்கினர்.விஷத்தால் ஈசனுக்கு ஆபத்து நேரிடுமோ? என அஞ்சிய பார்வதி தேவி ஈசனின் கழுத்தை பிடித்து விஷத்தை அவருடைய தொண்டையிலேயே நிறுத்தினார்.இக்காரணத்தால் பரமனின் கழுத்து நீலநிறமாக மாறியது.அன்று முதல் ஈசன் நீலகண்டன் என்றும் அழைக்கப் பட்டார்.
                          பிறகு தேவர்களும், அசுரர்களும் தங்கள் கடையும் பணியை தொடர்ந்தனர்.பாற்கடலை கடைய,கடைய ஒன்றன்பின் ஒன்றாக காமதேனு பசு, உச்சிரவஷ் வெள்ளை குதிரை, ஐராவதம் யானை,கற்பக விருட்சம், அட்சய பாத்திரம், அகலிகை என்ற பெண், திருமகள் என்னும் லட்சுமி ஆகியோர் வெளிவந்தனர்.இறுதியாக தன்வந்திரி அமிர்த கலசத்துடன் வெளிப்பட்டார்.
                           அமிர்தத்தை கண்ட தேவர்களும், அசுரர்களும் அதை முதலில் யார் பருகுவது என்று சண்டையிட தொடங்கினர்.அச்சண்டையை தடுக்க விஷ்ணுவும் மோகினி அவதாரம் எடுத்து இருவருக்கும் சரிபாதியாக பங்கிட்டு தருகிறேன் என்றார்.மோகினி அழகில் மயங்கிய அசுரர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.முதலில் தேவர்களுக்கு அமுதம் வழங்கப்பட்டது.அமுதம் விரைந்து காலியாக தொடங்கியதால், மோகினியின் சூழ்ச்சியை அறிந்த சுபர்பானு என்னும் அரக்கன் மட்டும் தேவர் உருவம் பூண்டு சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் அமர்ந்து கொண்டான்.
                           சுபர்பானுக்கும் அமிர்தம் வழங்கப்பட்டது.அவனது நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட, சூரிய சந்திரர்கள் மோகினியிடம் தெரிவித்தனர்.இச்செயலால் கோபம் கொண்ட மோகினி வடிவில் இருந்த விஷ்ணு,சுபர்பானுவை சுதர்சன சக்கரத்தால் இரண்டாக வெட்டி வீழ்த்தினார்.அமிர்தம் அருந்திய காரணத்தால் அவன் உயிர் பிரியவில்லை.

                           பின்னர் சுபர்பானுவின் பணிவான வேண்டுகோளின்படி துண்டான அவனது உடலின் இரண்டு பாகங்களும் நாகத்துடன் இணைக்கப்பட்டது.அரக்க தலை பாம்புடல் கொண்டவன் ராகு என்றும்,பாம்புத்தலை அரக்கவுடல் கொண்டவன் கேது என்றும் அழைக்கப்பட்டான்.
                           உலகின் கடைசி அசுரனான இராவணன் அழியும் வரை காத்திருந்து, அவர்களின் கடுந்தவத்தால் ராகுவும் கேதுவும் கிரக அந்தஸ்து பெற்றனர்.சூரிய சந்திரர்களின் மீது சுபர்பானு கொண்ட பகை காரணமாக, ராகுவும் கேதுவும் சூரிய சந்திர கிரகணத்தின் போது அவர்கள் ஒளி பூமியை அடையாதவாரு தடுக்க தொடங்கியது.


                              நன்றி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இராவணனின் மகன்- இந்திரஜித்

எட்டாவது அதிசயம் - அங்கோர் வாட்

இரும்பு மனிதன் - புருஸ்லீ