இரும்பு மனிதன் - புருஸ்லீ

20ம் நூற்றாண்டின் மிகுந்த செல்வாக்கான மனிதர் என்று டைம்ஸ் இதழால் புகழப்பட்ட புருஸ்லீ பற்றி தான் இப்பதிவில் பார்க்க போகின்றோம்.

              குங்பூ கலையுடன்,உலகின் முன்னனி கலாச்சார சண்டை முறைகளை இணைத்து ஜி-குன்-டோ என்னும் புதிய தற்காப்பு கலையை உருவாக்கினார்.அதிவேகமான செயல்பாடுகளுக்கும்,அசாதாரமான அசைவுகளுக்கும் சொந்தக்காரர்.அற்புதமான திறமைகள் பலவற்றை பெற்றாலும், அவற்றில் எவராலும் இன்றளவும் முறியடிக்க முடியாத சில சாதனைகளைப் பற்றி கூறுகிறேன். அவரது பேமஸான சைடு கிக்கிங் என்னும் முறைப்படி 45கிலோ எடை கொண்ட மணல் மூட்டையை சிதறடிக்கும் திறன் கொண்டவர். லின்சாக் என்பது ஒருவகை தற்காப்பு கருவி . அதை இரண்டு கைகளிலும் ஒரே சமயத்தில் கைக்கு ஒன்றாக அதிவேகமாக சுற்றும் திறன் படைத்தவர். ஒரு நொடியில் 9 முறை கையாலும் , 6 முறை காலாலும் தாக்கும் திறன் படைத்தவர் . 
                    இவர் விடும் 1 inch punch மிகப் பிரபலம் .ஒரு inch இடைவெளியில் இவர் விடும் குத்தானது 80 கிலோ எடை கொண்ட ஒரு மனிதரை 15 அடி நகர்த்தும் சக்தி கொண்டது. இரண்டு கை கொண்டு 1500 முறையும் , ஒரு கை கொண்டு 400 முறையும், ஒரு கையின் இரு விரல் கொண்டு 200 முறையும் , ஒரு கட்டை விரலை மட்டும் கொண்டு 100 முறையும் புஷ்சப் எடுக்கும் அபார திறமை படைத்தவர். 135 கிலோ எடை கொண்ட மணல் மூட்டையை ஒரே மிதியால் 15 அடி உயரத்திற்கு பறக்க விட்ட சாதனையையும் நிகழ்த்தியுள்ளார் . தான் போட்டியிட்ட ஒரு போட்டியிலும் தோல்வியை கண்டிராதவர். திரைப்பட சண்டையில் இவர் காட்டிய வேகமான அசைவுகளை அன்றைய கேமராவால் படமாக்க முடியவில்லை.

            1940 நவம்பர் 27 ல் சென் பிரான்ஸிஸ்கோ வில் ஒரு சீனத்தந்தைக்கும் , ஜெர்மன் தாய்க்கும் மகனாகப் பிறந்தார். பிறப்பிற்குப் பிறகு அந்த தம்பதி ஹாங் காங்கிற்கு குடிபெயர்ந்தனர். அங்கு மூர்க்கத்தனம் அதிகமுள்ளவராக வளர துடங்கிய புரூஸ்லீ அனேக காலத்தை தெரு சண்டையில் கழிக்கிறார். ஒரு முறை உள்ளூர் பிரபலம் ஒருவரின் மகனை நையப் புடைக்க பெற்றோரால் அமெரிக்கா அனுப்பப்படுகிறார் . அங்கு லிண்டா எமெரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரது ஆசிய மரபு லிண்டா வீட்டில் ஏற்றுகொள்ள முடியாததாக இருந்தது. அவரது ஆசிய மரபால் தொடர்ச்சியாக லீ பல இன்னல்களை சந்திக்க நேரிட்டது.  அக்காரணத்தினால் உலக மக்கள் அனைவராலும் விரும்பப்படுகிற நபராக வேண்டும் என்று துடித்தார். திறமைகள் பல இருந்தும் ஆங்கில திரைப்படங்களில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. பிறகு தற்காப்பு கலையை பிரபலங்களுக்கு கற்றுக் கொடுத்து வாழ்க்கையை நகர்த்தினார். 
               இனவெறி காரணமாய் ஹாலிவுட் தனக்கு வாய்பளிக்காது என்றுணர்ந்த லீ தன் நேரத்தை வீணடிக்காமல் ஹாங் காங்கில் தனக்கிருந்த பிரபலத்தை பயன்படுத்தி சொந்த படமான பிக்பாஸ் படத்தை எடுத்தார். 1971ல் வெளியான பிக்பாஸ் படம் மூலம் தெற்காசிய நாடுகளில் அதுவரை நிகழாத வசூல் சாதனையை நிகழ்த்தினார்.அடுத்தடுத்து நடித்த இரண்டு படங்களும் பிளாக் பஸ்டர் அடிக்கவே ஹாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்தது.ஹாலிவுட்டில் அவர் நடித்த 'என்டர் தி டிராகன்' படத்தை இன்றளவும் யாரும் மறக்க முடியுமா?

               ‌இன்று ஆசியர் என நிராகரிக்கப்பட்ட லீயின் உருவப்படம் தாங்கிய டிசர்ட்டுகள் பயன்படுத்தாத நாட்டினர் உள்ளனரா.'என்டர் தி டிராகன்' படத்தில் ஜாக்கிசான், புருஸ்லீயிடம் அடிவாங்குவது போல் ஒரு சீன் இடம் பெற்றுள்ளது.அந்நிகழ்வே ஜாக்கிசான் திரைப்பட வாழ்க்கைக்கு அச்சாணியாக அமைந்தது.உடலுக்கு மட்டும் இல்லாமல் மனதுக்கும் ஒரு சேர பயிற்சி அளித்தவர் புரூஸ்லீ.எப்போதும் மனதின் சமநிலை கெடாமல் பார்த்துக் கொண்டார்.ஆனால் முதல் மூன்று படங்களின் அசாதாரணமான வெற்றி, அதன் மூலம் கிடைத்த அளவற்ற புகழ், புருஸ்லீயின் சமநிலையை உடைத்து விட்டது.கஞ்சா பழக்கம், தவறான பெண்கள் சகவாசம்,உடனிருப்பவரை அவமதிப்பது,நண்பர்களை தூக்கி எறிவது, போன்ற பழக்கங்களை அவரது தொடர்வெற்றி கொடுத்திருந்தது.
              ஜீலை 20, 1973ல் தனது 33வது வயதில் காலமானார்.புருஸ்லீயின் மரணத்திற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றது.அதில் ஒன்று அவருடைய மனைவி லிண்டா தன் மோதிரத்தில் உள்ள வைரக்கல்லை அரைத்து புருஸ்லீக்கு கொடுத்து விட்டார் என்பதாகும்.இருந்தாலும் டாக்டர்கள் கூறும் காரணம் என்னவென்றால் அவரது கடைசி படமான 'கேம் ஆப் டெத்' தில் சண்டை காட்சியை படமாக்கும் போது ஏற்பட்ட விபத்தால் புருஸ்லீ யின் மூளையில் வீக்கம் ஏற்பட்டது.அதற்காக புருஸ்லீ பயன்படுத்திய‌ வலிநிவாரணி மருந்துகளால் அவர் இறந்து விட்டார் என்பது தான்.
                     அவரது மரணம் கூட ஒரு திரில்லர் மூவியின் கிளைமாக்ஸ் போன்றதுதான்.புருஸ்லீ சூட்டிங்கை முடித்து கொண்டு தனது கள்ளகாதலியான நடிகை ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்தார்.திடிரென புருஸ்லீக்கு தலைவலி வரவே, நிறைய வலிநிவாரணி மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார்.சிறிது நேரத்தில் மூர்ச்சையாக பதட்டத்தில் பத்திரிகைகளுக்கு பயந்து வளர்ந்து வரும் நடிகையும் அமைதியாக இருந்துவிட்டார்.1/2 மணி நேரத்திற்கு பிறகே பயம் தொற்றிக் கொள்ள புருஸ்லீ யின் நண்பருக்கு விசயத்தை சொல்கிறார்.அன்று ஹாங்காங்கில் புயல் எச்சரிக்கை.புருஸ்லீ நண்பரும் டிராபிக்கில் மாட்டி ஒருவழியாக வந்து சேர்ந்து அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.அங்கு புருஸ்லீ ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இப்படியாக புருஸ்லீ என்னும் சகாப்தம் முடிவுக்கு வந்தது.

                 வெறும் 4 (1/2) படங்களே நடித்து உலகமக்களின் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்த இந்த சீனப் புயல் தனது தவறான பழக்கத்தால் தன்னிலை அறியாது செயல்பட்டதால் முடிவுக்கு வந்தது.இவர் ஒரு ஏலியனாக இருக்கலாம் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.எது எப்படியோ உலகத்தில் ஏதாவது ஒரு மூலையில் இன்றளவும் புருஸ்லீ பெயர் ஒலிக்கிறது என்றால் அதற்காக அவர் எடுத்துக்கொண்ட உழைப்பும், விடாமுயற்சியும் எத்தகையது என்பதை எண்ணிப் பார்க்க தான் வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இராவணனின் மகன்- இந்திரஜித்

எட்டாவது அதிசயம் - அங்கோர் வாட்